மர்ம விலங்கு கடித்து 15-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி..!
கரூர் அருகே அடையாளம் கண்டுபிடிக்க முடியாத விலங்கு கடித்து 15 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்தன.
கரூர் மாவட்டம் ஆத்தூர் கிராமம் பெரிய வடுகபட்டி பகுதியை சேர்ந்தவர் சிவசாமி. இவரது விவசாயத் தோட்டம் ஆத்தூர் சிப்காட் அருகில் உள்ளது. சிவசாமி தினந்தோறும் 40க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை மேய்த்து முடித்த பின்னர், இரவில் தனது பட்டியில் அடைத்து வைப்பது வழக்கம். நேற்று இரவு வழக்கம் போல பட்டிக்குள் ஆடுகளை அடைத்து விட்டு தூங்கச் சென்றார்.
காலையில் பார்த்தபோது 15 செம்மறி ஆடுகள் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தன. மேலும் சில ஆடுகள் படுகாயமடைந்து கிடந்தன. அவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆத்தூர் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் கால்நடை மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆடுகளை வெறி நாய்கள் கடித்து குதறியதா ? அல்லது வேறு மர்ம விலங்கு ஏதேனும் கடித்துக் கொன்றதா ? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது. 15 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம், அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.