1,492 சவரன் நகைக் கொள்ளை : போலீசில் சிக்கும் கும்பல்
மதுரையில் அடகுக் கடையில் 1,492 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக மேலும் ஒரு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டம் நரிமேடு என்னுமிடத்தில் கோபிநாத் என்பவர் அடகுக் கடை நடத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி இவரது நகைக்கடைக்குள் நள்ளிரவில் ஒரு கொள்ளைக் கும்பல் நுழைந்தது. முகமூடிக் அணிந்துகொண்ட வந்த அக்கும்பல் சுமார் 12 கிலோ நகைகள் மற்றும் 9 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். இதையடுத்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கொள்ளையர்களை தனிப்படைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு அருகாமையில் இருந்த ஒரு சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த பார்த்தபோது, அடகுக்கடைக்கு எதிரே உள்ள தனியார் நிறுவனத்தின் கண்காணிப்புக் கேமராவை கொள்ளையர்கள் உடைக்கும் காட்சி அதில் பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது. அதன்மூலம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கொள்ளையர்கள் நகைகளை மினிவேனில் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. பின்னர் மினி வேனின் பதிவெண்ணை பயன்படுத்தி 4 பேரைப் பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் நகைகளை ஏற்றிச் செல்வதற்காக கொள்ளையர்கள் பயன்படுத்திய மினிவேனின் சிசிடிவி காட்சி மேலும் முப்பதுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் தனிப்படைக் காவல்துறையினர் குறிப்பிட்ட மினிவேன் பதிவெண்ணை பயன்படுத்தி கொள்ளை கும்பலை நெருங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.