பேருந்து சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு
சென்னையில் 14 வயது பள்ளி மாணவன் ஒருவன் பேருந்தில் இருந்து கீழே விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்த பள்ளி மாணவன் கபிலன். இவர் அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தனது நண்பன் வீட்டிற்கு படிக்க சென்ற கபிலன் பிராட்வேயிலிருந்து மாதவரம் செல்லும் பேருந்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
அப்போது மாலை நேரம் என்பதால் பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. சீக்கிரம் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பேருந்தில் ஏறிய கபிலன் நெருக்கடியால் படிகட்டிலேயே பயணம் செய்துள்ளார். அப்போது அவர் பின்னால் அணிந்திருந்த பேக் ஒன்று பேருந்து சென்று கொண்டிருக்கும்போது மின்மாற்றி கம்பியில் சிக்கியது.
இதில் கபிலன் பேருந்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டார். அப்போது கபிலன் பேருந்தின் பின்புற சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதையடுத்து பேருந்து உடனே நிறுத்தப்பட்டு அங்கிருந்தவர்கள் அருகில் இருந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கபிலனை சேர்த்தனர். ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வண்ணார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த கபிலன் உடலை அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக பேருந்து ஓட்டுநர் அலட்சியமாக வாகனம் இயக்குதல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் சென்னை திநகரில் இருபேருந்துகளுக்கு இடையே கடக்க முயன்ற பெண்மணி ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.