சரியாக புதைக்கப்படாத வயர் : மின்சார வாரிய அலட்சியத்தால் பறிபோன உயிர்
சென்னை முகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் உடலை சாலையில் கிடத்தி பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
சென்னை முகலிவாக்கத்தில் தெரு விளக்கு மற்றும் கழிவு நீர் குழாய் அமைக்கும் பணிகளுக்காக சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டதாக தெரிகிறது. பணிகள் முழுமையாக முடிவடையாததால் தோண்டப்பட்ட குழிகளில் மண்ணை போட்டு தற்காலிகமாக அவற்றை மூடி வைத்ததாக சொல்லப்படுகிறது. தொடர் மழையால் குழிகளில் போடப்பட்ட மணல் வெளியேறியதால் சாலையின் கீழே புதைக்கப்பட்டிருந்த மின் கேபிள் மேலே வந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதுபோன்ற ஒரு கேபிளில் இருந்து கசிந்த மின்சாரம் தாக்கி, செந்தில் என்பவரின் 14 வயது மகன் தீனா உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து மின்வாரியம் மற்றும் காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் 2 மணி நேரம் கழித்தே காவல்துறையினர் நிகழ்விடத்துக்குச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சிறுவனின் உயிரிழப்புக்கு மின்வாரியத்தின் அலட்சியமே காரணம் என குற்றம்சாட்டி, அவரது உடலை சாலையில் கிடத்தி மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். தவறுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்ததை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.