அனுமதியின்றி செயல்பட்ட 14 டாஸ்மாக் - புதிய தலைமுறை செய்தியால் சீல் வைப்பு

அனுமதியின்றி செயல்பட்ட 14 டாஸ்மாக் - புதிய தலைமுறை செய்தியால் சீல் வைப்பு

அனுமதியின்றி செயல்பட்ட 14 டாஸ்மாக் - புதிய தலைமுறை செய்தியால் சீல் வைப்பு
Published on

சேலத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த பதினான்கு டாஸ்மாக் பார்களுக்கு புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக, சீல் வைக்கப்பட்டது. 

சேலம் மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளை ஒட்டிய சில கடைகளில், ஒருசிலர் மட்டும் பார் வைக்க உரிமம் பெற்றுநடத்தி வருகிறார்கள். டாஸ்மாக் பார் நடத்தும் அதன் உரிமையாளர்கள் மாதந்தோறும் அரசுக்கு விற்பனை தொகையை செலுத்துவதோடு, ஆண்டு தோறும் பார் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஆனால் சில டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலவை தொகையை பல மாதங்களாக செலுத்தாமல் அனுமதியின்றியும் பார்களை நடத்தி வருவதாக புகார் வந்தது. இதுகுறித்து புதிய தலைமுறையில் கடந்த வாரம் செய்தி வெளியானது. 

அதன்பேரில், மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் பார்கள் குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கணக்கெடுப்பு செய்து ஆய்வு செய்தனர். அப்போது ஓமலூர் வட்டாரத்தில் உள்ள தாரமங்கலம், குருக்குப்பட்டி, கீரிப்பட்டி, காமலாபுரம், தலைவாசல், எம்.காளிப்பட்டி, காட்டுக்கோட்டை, இடைப்பாடி, கெங்கவல்லி உள்பட 14 இடங்களில் அனுமதியின்றி டாஸ்மாக் கடைகள் அருகில் பார்கள் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அனுமதியின்றி செயல்பட்ட 14 டாஸ்மாக் பார்களுக்கு அதிகாரிகள் உடனடியாக சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். 

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 14 டாஸ்மாக் பார்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் அந்த பார்களை திறந்து அதன் உரிமையாளர்கள் நடத்துவது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட பகுதி போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பார் ஏலம் விடும்போது முறைப்படி விண்ணப்பம் கொடுத்து பார்களை ஏலம் எடுத்து முறையாக நடத்தலாம் என்று தெரிவித்தனர். மேலும், அதிகாரிகள் ஆய்வுக்கு பிறகும் ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் கிராமத்தில் உள்ள மூன்று டாஸ்மாக் கடைகளை ஒட்டியே மீன், கோழி வறுவல் கடைகள் என்ற போர்வையில் பார்களை நடத்தி வருகின்றனர். அங்கே குடிக்க அனுமதித்து கூடுதலாக பணம் வசூலித்து வருகின்றனர். அவற்றை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com