புதுக்கோட்டை : குடிநீர் எடுக்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
புதுக்கோட்டை அருகே குடிநீர் எடுக்கச்சென்ற 13 வயது சிறுமி உடலில் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நொடியூர் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி நேற்று காலை குடிநீர் எடுக்க சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் சிறுமியை தேடியுள்ளனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள தைல மரக் காட்டில் உடலில் காயங்களுடன் மயங்கிய நிலையில் சிறுமி கிடந்தார். இதையடுத்து சிறுமி மீட்கப்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சிறுமி உயிரிழந்தார். சிறுமி பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் நான்கு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.