வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு நேர்ந்த சோகம் - சென்னையில் கொடூரம்
ஆதம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமி உடல் முழுவதும் கிழித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் நகர் 109-வது சந்தில் வசித்து வருபவர் வேதவள்ளி (50). இவரது தம்பி மகள் சோபனா (13). சோபனாவின் பெற்றோர் சிறு வயதிலேயே இறந்து விட்டதால், 10 ஆண்டுகளாக வேதவள்ளி தான் சோபனாவை வளர்த்து வந்துள்ளார். வேதவள்ளியுடன் அவரது மகன் பாபும் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை வேதவள்ளி, வீட்டு வேலைக்கு சென்றிருந்தபோது அவரது மகன் பாபு வீட்டிற்கு வந்து தனியாக இருந்த சோபனாவை உடல் முழுவதும் பல இடங்களில் கிழித்து கொலை செய்துவிட்டு தப்பியோடிதாக கூறப்படுகிறது. காலை 11 மணியளவில் சோபனான் சகோதரி மோனிஷா வந்து பார்த்த போது, சோபனா ரத்த வெள்ளத்தில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சோபனாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர், ஆதம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர். மேலும், பாபு தான் கொலை செய்தாரா ? இல்லை வேறு யாராவது கொலை செய்தனரா ? என விசாரித்து வருகின்றனர்.