குடிநீர் எடுக்கச் சென்ற 13 வயது சிறுமி கொலை - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
புதுக்கோட்டை அருகே குடிநீர் எடுக்கச் சென்ற 13 வயது சிறுமி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நொடியூர் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி குடிநீர் எடுக்க கிணற்றுக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் சிறுமியை தேடியுள்ளனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள தைல மரக் காட்டில் உடலில் காயங்களுடன் மயங்கிய நிலையில் சிறுமி கிடந்தார். இதையடுத்து சிறுமி மீட்கப்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். சிறுமி பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் உடல் அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.

இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை எஸ்பி அருண்சக்தி குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அவர் 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை உடனடியாக கண்டறிய உத்தரவிட்டுள்ளார். சிறுமியின் உறவினர்கள் மற்றும் அந்த கிராமத்தைச் சேர்ந்த சந்தேகப்படும் நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.