“எங்க மகன் இறந்தாலும், அவன் கண்கள் இறக்காது” - கண்ணீருடன் பெற்றோர் பெருமிதம்!
விராலிமலை அருகே ஏற்பட்ட வேன் விபத்தில் உயிரிழந்த 13 வயது சிறுவனின் கண்கள் தானம் செய்யப்பட்டது.
நாகப்பட்டிணம் மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து 16 பேர் சுப நிகழ்ச்சிக்காக கமுதிக்கு வேனில் சென்றிருந்தனர். நிகழ்ச்சி முடிந்து நேற்று மாலை 16 பேருடனும் மயிலாடுதுறை திரும்பிக்கொண்டிருந்த அந்த வேன், திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலையை அருகே வந்தபோது டயர் வெடித்து தடுமாறியது. ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து நிலைகுலைந்த அந்த வேன், நெடுஞ்சாலையின் தடுப்புசுவரில் மோதி சாலையில் கவிழ்ந்தது.
இதில் வேனில் பயணித்த நிறைமாத கர்ப்பிணி தேவிகா உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் விழுப்புரத்தை சேர்ந்த கணிப்பொறி பொறியாளர் மோகன், கிரகலெட்சுமி ஆகியோரின் 13 வயது மகன் சரண் என்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது சிறுவனின் கண்களை அவரது பெற்றோர் தானம் செய்ய விருப்பம் தெரிவித்தனர்.
பெற்றோரின் விருப்பப்படி திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவ மனையிலிருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சிறுவன் கண்கள் அகற்றப்பட்டு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக பேசிய பெற்றோர், “எங்கள் மகன் இறந்தாலும், அவனது கண்கள் வாழும்” என கண்ணீருடன் பெருமிதமாக தெரிவித்தனர். இந்த நிகழ்வு காண்போரை கலங்கச் செய்தது. விபத்துக்கு முன் சிறுவன் பேசிய டப்மாஷ் வீடியோ, அவரது நல்ல உள்ளத்தை பிரதிபலிக்கும் வகையில் இருப்பது உறவினர்கள் மட்டுமின்றி காண்போரின் உள்ளத்திலும் நெருடலை ஏற்படுத்தியது.
(தகவல்கள் : சுரேஷ்குமார், புதிய தலைமுறை செய்தியாளர், மணப்பாறை)