புதுக்கோட்டை மாவட்டம் மாந்தாங்குடியில் கதண்டு கடித்து இரண்டு குழந்தைகள், 4 மாணவ மாணவிகள் உள்ளிட்ட 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை தஞ்சாவூர் சாலையில் உள்ள மாந்தான்குடியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஆலமரத்திலிருந்து வந்த கதண்டுகள் இரண்டு குழந்தைகள் நான்கு மாணவ மாணவிகள் உள்ளிட்ட 13 பேரை கடித்துள்ளது.
இதில், காயமடைந்த 13 பேரும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 13 பேரையும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அங்கு உள்ள மருத்துவர்களிடம் கதண்டுகடித்து காயம் அடைந்த அனைவருக்கும் உரிய முறையில் சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார்.
மேலும் மாந்தாங்குடி பகுதியில் உள்ள கதண்டுகளை அப்புறப்படுத்த தீயணைப்புத் துறையினருக்கு பரிந்துரை செய்தார்.