மிரட்டும் தொற்று: சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா!
சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
சென்னையில் நேற்று ஒரே நாளில் 174 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் ஆங்காங்கே தென்பட்ட கொரோனா பாதிப்பு, ஏப்ரல் 24ஆம் தேதி 50ஐ கடந்தது. அதன்பின் ஏற்ற இறக்கத்தோடு இருந்த பாதிப்பு ஏப்ரல் 28ஆம் தேதி சதத்தை கடந்தது.
ஏப்ரல் 23ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 400ஆக இருந்தது. இந்த நிலையில் படிப்படியாக அதிகரித்து மே 1 ஆம் தேதி சென்னையில் மட்டுமே பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. தற்போது புதிதாக 174 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1257ஆக அதிகரித்துள்ளது. பிற மாவட்டங்களை ஒப்பிடும் போது மொத்த பாதிப்பில் 45.5% பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
இதற்கிடையே சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஆதம்பாக்கத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவர்கள் மூன்று பேரும் 60வயதிற்கு அதிகமானவர்கள் ஆவர்.

