மெரினா கடலில் குளித்த 12 ஆம் வகுப்பு மாணவன், கல்லூரி மாணவர் பலி.!

மெரினா கடலில் குளித்த 12 ஆம் வகுப்பு மாணவன், கல்லூரி மாணவர் பலி.!
மெரினா கடலில் குளித்த 12 ஆம் வகுப்பு மாணவன், கல்லூரி மாணவர் பலி.!

மெரினாவில் குளிக்கச் சென்ற 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர், கல்லூரி மாணவர் என இருவர் அடுத்தடுத்து பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் சாகுல் என்பவரது மகன் அஷ்ரப் (17). இவர் மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது வகுப்பு தோழன் டேனியலுடன் சேர்ந்து நேற்று பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில் பங்கேற்று விட்டு இருவரும் மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

நொச்சி நகர் டி பிளாக் எதிரே உள்ள கடலில் அஷ்ரப், டேனியல் குளித்துள்ளனர். அப்போது அஷ்ரப் தனக்கு நீச்சல் தெரியும் நான் சிறிது தூரம் செல்கிறேன் எனக்கூறி கடலுக்குள் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை ராட்சத கடல் அலை இழுத்துச் சென்றது. அவனது நண்பன் டேனியல் சத்தமிட்டதும் அருகில் இருந்த மீனவர்கள் டேனியலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

ஆனால் அஷ்ரப்பை காப்பாற்ற முடியவில்லை. அவர் கடலில் மூழ்கினார். பிறகு மாணவன் அஷ்ரப் உடல் நொச்சிக்குப்பம் 10 வது பிளாக் எதிரில் கடற்கரையில் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்து மயிலாப்பூர் போலீசார் மாணவன் அஷ்ரப் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைப்போல, சென்னை மெரினா கடற்கரை நேதாஜி சிலை பின்புறம் நேற்று 10 கல்லூரி மாணவர்கள் கடலில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு மாணவர் கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடி வந்தார். உடனடியாக அங்கு இருந்த மீனவர்கள் சிலர் கடலில் தத்தளித்த அந்த மாணவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்த போது, அவர் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தார். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலமாக அந்த மாணவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த மெரினா போலீசார் நடத்திய விசாரணையில், இறந்த நபர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த ஹரின் ஜெயின் என்பதும், தனியார் கல்லூரியில் மாணவர்களுடன் தங்கி படித்து வருவதும் தெரியவந்தது. நேற்று மாணவர்களுடன் சேர்ந்து மெரினாவில் குளிக்க வந்த போது கடலில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com