மாணவிக்கு பாலியல் வன்கொடுமை : இளைஞர் குண்டர் சட்டத்தில் அடைப்பு
புதுக்கோட்டையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் நரிமேடு அருகே உள்ள பசும்பொன் நகரை சேர்ந்தவர் சுரேஷ். திருமணமான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. அந்த மாணவி மூன்று மாத கர்ப்பமானார். இதனால் அவரது பெற்றோர்கள் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 11ம் தேதி புகார் அளித்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சுரேஷை தேடி வந்தனர். சுரேஷின் மனைவி சரண்யா தவறு செய்த தனது கணவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். கடந்த 12ம் தேதி சுரேஷை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை எஸ்.பி செல்வராஜ் பரிந்துரையின் பேரில், பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சுரேஷ் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டார். அதன்படி சுரேஷ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.