விதிகளை மீறிய 119 வாகன ஓட்டுனர் உரிமங்கள் ரத்து - வட்டார போக்குவரத்து துறை அதிரடி
கோவை மாவட்டம் மேட்டுப்பளையத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 119 வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமங்களை வட்டார போக்குவரத்து துறை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகரிக்கும் விபத்துகளை தடுக்க போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்துறை அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், மேட்டுப்பாளையம் ,சிறுமுகை. மற்றும் காரமடை பகுதிகளில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள், உயிரிழப்பு ஏற்படும் வகையில் விபத்து ஏற்படுத்தியவர்கள், மற்றும் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியவர்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டியவர்கள், சாலை விதிகளை பின்பற்றாதவர்கள் என ஒரே நாளில் மொத்தம் 119 வாகன ஓட்டுனர்களின் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்து மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவர்களுக்கு 6 மாதங்கள் வாகனங்கள் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினாலோ அல்லது அதன் மூலம் உயிரிழப்பு ஏற்பட்டாலோ அவர்களின் ஓட்டுநர் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் காரணமாக கேரள எல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்குள் நுழையும் அணைத்து வாகனங்களும் தீவிர கண்காணிப்பிற்கு பின்பே அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.