காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு சிறப்பு ரயில்கள் மூலம் 1100 பேர் செல்கிறார்கள் - ஐ.ஐ.டி. இயக்குநர்
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து ஐந்து சிறப்பு ரயில்கள் மூலம் 1,100 பேர் 5 குழுக்களாக செல்ல உள்ளனர்.
ஐ.ஐ.டி. மெட்ராஸ் 3-வது ஆண்டு காசி தமிழ்ச் சங்கம் நிகழ்வுக்கு தயாராகி வருகிறது. தமிழ்நாட்டுக்கும், வாரணாசிக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்தும் வகையில் பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் பிப்ரவரி 24-ஆம் தேதி வரை காசி தமிழ் சங்கமம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி இன்று தரமணியில் உள்ள ஐ.ஐ.டி.(எம்) ஆராய்ச்சி பூங்காவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”காசி தமிழ்ச் சங்கமம் 3-வது ஆண்டாக வருகிற பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் பிப்ரவரி 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்துக்கும் - காசிக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தமிழ் சங்கமும் நடைபெறுகிறது.
வெறும் ஆன்மீகம் மட்டுமல்லாது பல்வேறு தொடர்புகள் உள்ளது. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற தலைப்பின் அடிப்படையில் இங்குள்ள மக்கள் காசியை பற்றி தெரிந்து கொள்ள வசதியாக இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது.
இந்த வருடம் மகா கும்பமேளா பிரயாக்ராஜ்ஜில் நடைபெறுகிறது. வழக்கமாக நவம்பர் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் நிகழ்வு கும்பமேளாவை ஒட்டி இந்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்படுகிறது. முதல் குழு பிப்ரவரி 13-ஆம் தேதி இங்கிருந்து செல்கிறது. நான்கு நாட்கள் அவர்கள் நிகழ்வில் கலந்து கொள்வார்கள். வாரணாசியில் உள்ள நமோ காட்டில் கலாச்சார நிகழ்வுகள் நடைபெறுகிறது.
மாணவர்கள் ஆசிரியர்கள் உழவர்கள் உள்ளிட்ட பலதரப்பட்டு மக்கள் பிரித்து அனுப்பப்படுகிறார்கள். இந்த முறை பெண்களுக்காக தனிக்குழு இங்கிருந்து செல்கிறது. தமிழ்நாட்டில் இருந்து 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு சம எண்ணிக்கையில் மொத்தம் ஆயிரம் பேர் பிரிக்கப்பட்டு சம எண்ணிக்கையில் பங்கேற்க உள்ளனர். மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழக மாணவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள்.
இந்த ஆண்டின் சிறப்பம்சமாக கும்பமேளா நடைபெறுகிறது. காசி தமிழ் சங்கமம் நிகழ்வையொட்டி பல்வேறு போட்டிகள் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பங்கேற்பாளர்கள் தமிழ் கவி சுப்பிரமணிய பாரதியாரின் பழங்காலத்து இல்லம், கேதார் காட், காசி மண்டபம் ஆகியவற்றை பார்வையிடதுடன் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து தமிழ் துறையில் கல்வி இலக்கியம் தொடர்பான கலந்துரையாட உள்ளனர்.
அகத்தியரின் பங்களிப்பு சித்த மருத்துவத்திற்கு ஈடு இணையற்றது. சித்த மருத்துவ முறை பாரம்பரிய தமிழ் இலக்கியம் தேசத்தின் கலாச்சார ஒற்றுமைக்கு அகத்தியர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பு ஆகியவற்றை எடுத்துக்காட்டுவது தான் காசி தமிழ்ச் சங்கத்தில் இந்த ஆண்டுக்கான முக்கிய கருப்பொருள். சென்னையிலிருந்து ஐந்து ரயில்கள் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உத்தரப்பிரதேசம் செல்கிறார்கள். அயோத்தி ராமர் கோயில், வாரணாசி கோயில், கும்பமேளா நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள். அயோத்தி ராமர் கோயில், வாரணாசி கோயில், கும்பமேளா நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள். http://kashitamil.iitm.ac.in. என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
காசி தமிழ் சங்கத்திற்கு செல்வதற்கு ஒரு நபருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவாகும்.ஆனால் முழு செலவை மத்திய கல்வி துறை அமைச்சகம் ஏற்று கொள்கிறது. இதில் ஆன்லைனில் முன் பதிவு செய்பவர்கள் முன்பணமாக 1500 ரூபாய் செலுத்த வேண்டும் அவர்களின் பயணம் உறுதி செய்த பின்னர் ரயிலில் பயணி ஏறிய பிறகு முன் பணம் திருப்பி கொடுக்கப்படும். பயணம் உறுதி செய்யாதபட்சத்தில் பணம் திருப்பி கொடுக்கப்படமாட்டது என்றார்.