சூட்கேஸ் கைப்பிடியில் தங்கக் கம்பி.. விமான நிலையத்தில் சிக்கிய நபர்..!
சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ 42 லட்சத்து 08 ஆயிரம் மதிப்புள்ள 1,100 கிராம் தங்கத்தை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக மதுரை விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மத்திய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர், உதவி ஆணையர் வெங்கடேஷ் பாபு தலைமையில் வெளிநாட்டில் இருந்து வரும் விமான பயணிகளிடம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு வந்த பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தனியாக அழைத்து சோதனை செய்தனர். அப்போது அவர் ரூ 42 லட்சத்து 08 ஆயிரம் மதிப்புள்ள கம்பி போன்ற அமைப்புடைய 1100 கிராம் தங்கத்தை பையின் கைப்பிடியில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர் அருப்புக்கோட்டையை சேர்ந்த சாகுல் ஹமீது என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்து தங்க கம்பியை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் சாகுல் ஹமீதை பெருங்குடி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.