ரயிலுக்கு செல்லும் தண்ணீருக்கு போலீசார் கட்டுப்பாடு.. கழிவறை நாற்றத்தால் கஷ்டப்படும் மக்கள்..!

ரயிலுக்கு செல்லும் தண்ணீருக்கு போலீசார் கட்டுப்பாடு.. கழிவறை நாற்றத்தால் கஷ்டப்படும் மக்கள்..!
ரயிலுக்கு செல்லும் தண்ணீருக்கு போலீசார் கட்டுப்பாடு.. கழிவறை நாற்றத்தால் கஷ்டப்படும் மக்கள்..!

சென்னை எழும்பூரில் இருந்து வெளியூர்களுக்கு புறப்படும் பல ரயில்களின் கழிவறையில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

சென்னை எழும்பூரில் இருந்து தமிழகத்தின் தென்னகப் பகுதிகளுக்கும் மற்ற மாநிலங்களுக்கும் நாள்தோறும் 33 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் கழிவறை வசதிக்கான தண்ணீர், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தான் ரயில்களில் நிரப்பப்படும். இந்நிலையில் பல ரயில்களின் கழிவறையில் தண்ணீர் வசதி இல்லாதததால் ரயில் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரியில் இருந்து நிஜாமூதின் செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த வாரம் குணவதி என்ற பெண் பயணம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ ரயில் எழும்பூர் நிலையத்திலிருந்து கிளம்பிய பின்னர் அடுத்து விஜயவாடாவில் தான் நிற்கும். இது கிட்டத்தட்ட 7 மணி நேர பயணமாகும். இந்த 7 மணி நேரத்தில் ரயில் கழிவறையில் தண்ணீர் வசதி இல்லை. கழிவறையில் இருந்து தொடர்ச்சியாக துர்நாற்றம் வந்து கொண்டிருந்தது. எங்களால் அந்த கழிவறையை உபயோகிக்கவே முடியவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் திணறிவிட்டோம். ரயில்வே அதிகாரியை கேட்டபோது, தண்ணீர் பற்றாக்குறையால் நீர் நிரப்பப்பட முடியாமல் போய்விட்டது என கூறினார்.” என்றார்.

இதுமட்டுமில்லாமல் பல்லவன் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், புவனேஸ்வர்- ராமேஸ்வரம் வார எக்ஸ்பிரஸ் உள்பட பல இடங்களில் இந்த பிரச்னை நிலவுகிறது. மொத்தமாக நாள் ஒன்றுக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு 33 ரயில்கள் இயக்கப்படும் நிலையில் அவைகளில் 11 ரயில்கள் காலை 8 மணியிலிருந்து பகல் 1 மணிக்குள் இயக்கப்படுகின்றன. இத்தயை ரயில்களில்தான் பெரும்பாலும் தண்ணீர் பிரச்னை ஏற்படுகின்றன.

ரயில்களில் நீர் நிரப்ப எழும்பூர் ரயில் நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு 10 லட்சம் லிட்டம் தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்காக தனியார் கம்பெனிகளிடம் இருந்துதான் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. ஆனால் தண்ணீர் கொண்டுவரும் டேங்கர் லாரிகள் சரியான நேரத்திற்கு வர முடியாத காரணத்தினால்தான் ரயில்கள் தண்ணீரின்றி இயக்கப்பட வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

சென்னை சிட்டிக்குள் தண்ணீர் டேங்கர் லாரிகள் காலை 8 மணியிலிருந்து மதியம் வரை நுழைவதற்கு போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர். வாகன விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தனியார் கம்பெனிகள் இரவு 8 மணி வரை தான் டேங்கர் லாரிகளை இயக்குகின்றன. அப்படியிருக்க காலை 8 மணிக்குள் தண்ணீரை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கொண்டுவருவது என்பது முடியாத காரணமாக சொல்லப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக இந்த பிரச்னை இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ரயில் நிலைய நடைமேடையில் உள்ள தண்ணீர் குழாய்களிலும் தண்ணீர் வருவதில்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறும்போது, “ இந்திய ரயில்வே, சம்பந்தப்பட்ட லாரியின் நம்பருடன் எங்களை அணுகும்பட்சத்தில் குறிப்பிட்ட லாரிகளுக்கு மட்டுமே விலக்கு அளித்து பரபரப்பான நேரத்திலும் சென்னை சிட்டிக்குள் செல்ல அனுமதிப்போம்” என்றார்.

Courtesy: Indian Express

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com