டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு இன்று ஒரேநாளில் 11 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாக இன்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சுமார் 12,000 பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 1,150 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. நாளுக்கு நாள் டெங்குவுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருப்பூர் சாமளாபுரம் பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக கவிதா என்ற பெண்ணும், கண்ணகி நகரில் 8-ஆம் வகுப்பு மாணவி அருந்ததியும் வைரஸ் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள சந்தபேட்டையில் டெங்கு காய்ச்சலுக்கு மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி சாந்தி, கிருஷ்ணகிரி ஊத்தங்கரையைச் சேர்ந்த சங்கர், நாகையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 11-ஆம் வகுப்பு மாணவர் பிரவீன்குமார், சேலத்தைச் சேர்ந்த சிவசக்தி உள்பட 11 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, வைரஸ் காய்ச்சல் அல்லது டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களிடம் கண்டிப்பாக உரிய சிகிச்சை பெற வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.