11, 12 ஆம் வகுப்பு தேர்வு முறையில் இத்தனை மாற்றங்களா?
11, 12ஆம் வகுப்பு தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்கள் வரும் கல்வியாண்டு முதலே அமல்படுத்தப்பட உள்ளது.
11ஆம் வகுப்புத் தேர்வும் பொதுத் தேர்வாக மாற்றப்படுவதோடு, 11,12ஆம் வகுப்புத் தேர்வு நேரம் இரண்டரை மணி நேரமாகக் குறைக்கப்படுகிறது. அனைத்துப் பாடங்களுக்கும் 10 மதிப்பெண் அகமதிப்பீடாக வழங்கப்பட உள்ளது. செயல்முறைத் தேர்வாக நடத்தப்படும் தொழிற்கல்விக்கு மட்டும் 25 சதவிகித மதிப்பெண் அகமதிப்பீடாக வழங்கப்படும். மொழித்தாள் எழுத்துத் தேர்வுக்கு 90 மதிப்பெண்கள் வழங்கப்படும். செய்முறைத் தேர்வுள்ள முக்கியப் பாடங்களுக்கு 20 மதிப்பெண்ணும் எழுத்துத் தேர்வுக்கு 70 மதிப்பெண்களும் வழங்கப்படும்.
மேல்நிலைக் கல்வியின் இரண்டாண்டுகளான 11,12ஆம் வகுப்பின் மதிப்பெண்கள் சேர்த்தே 1200 மதிப்பெண்களாகிறது. இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து இரண்டாம் ஆண்டிலேயே செய்முறைத் தேர்வு நடத்தப்படும். மொழித்தாளின் இரு தாள்களின் சராசரி 100 மதிப்பெண்களுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். 11ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தாலும் 12ஆம் வகுப்பில் படித்துக் கொண்டே தோல்வியடைந்த பாடங்களில் அரியர் முறையில் தேர்ச்சி பெறலாம். 35 சதவிகிதம் தேர்ச்சி மதிப்பெண். Consolidated marksheet எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.