ஒப்பந்ததாரரின் இடங்களில் சிக்கிய 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் !
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரைக்குச் சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் 174 கோடி ரூபாய் பணம் 105 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் விருதுநகரில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் திங்கட்கிழமை அதிகாலை 5. 30 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். செய்யாத்துரையின் வீடு, அலுவலகம் மட்டுமின்றி அவரது துணை நிறுவனங்கள், ஊழியர்கள், தொழில் கூட்டாளிகள், உறவினர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் என 10 இடங்களில் சோதனை செய்யப்பட்டது.
2நாட்களாக நடைபெற்று வந்த சோதனையின் முடிவில் 174 கோடி ரூபாய் பணம் மற்றும் 105 கிலோ தங்கம், ஆவணங்கள், முக்கிய தகவல்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்குகள் ஆகியவற்றை வருமான வரி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கத்தை எண்ணி சரிபார்த்து கட்டுகளாக கட்டும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்ட காட்சி வெளியாகியுள்ளது. செய்யாத்துரையிடம் கைப்பற்றப்பட்ட தங்கக் கட்டிகள், ரூபாய் கட்டுகள் குறித்த படமும் வெளியாகியுள்ளது.
செய்யாதுரை வீட்டில் இருந்து 24 லட்சம் ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாகவும், மீதித் தொகையை தனது நிறுவன ஊழியர்கள், உறவினர்களுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் இணை நிறுவன அலுவலகங்களில் செய்யாதுரை பதுக்கி வைத்திருந்ததாகவும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. இரண்டு சொகுசுக் கார்களிலும் பணத்தை செய்யாதுரை பதுக்கி வைத்திருந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும், சென்னை அண்ணா மேம்பாலத்திலுள்ள அரசுக்கு சொந்தமான சிறிய அறையிலிருந்து 4 கோடியும், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அறையிலிருந்து 4 கோடியும், பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், மயிலாப்பூரிலுள்ள பூமிநாதன் என்பவரது வீட்டிலிருந்தும் 25 மூட்டைகளில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தனது வருமானத்தை கணக்கில் காட்டாமல் மறைத்ததை செய்யாதுரை ஒப்புக்கொண்டதாகவும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. துணை ஒப்பந்தத் தொகை மற்றும் தொழிலாளர் ஊதியத்தை பலமடங்காக காட்டி கணக்கில் வராத சொத்துகளை சேர்த்ததாக செய்யாதுரை ஒப்புக்கொண்டுள்ளதாக வருமானவரித்துறை கூறியுள்ளது.