திருப்பூர்| 100 வயதை கடந்தும் ஆரோக்கியமாக வாழும் பாட்டி! 7 தலைமுறைகள் ஒன்றாகக் கொண்டாடிய பிறந்தநாள்!
செய்தியாளர் - ஹலித் ராஜா
இன்றைய வேகமான வாழ்க்கை முறையிலும், உடல் நல சவால்களும் நிறைந்த காலத்திலும், 100 வயதை கடந்தும் ஆரோக்கியமாக வாழ்கிறவர்கள் அரிதாகவே காணப்படுகின்றனர். ஆனால் அந்த தலைமுறை மனிதர்கள் கடின உழைப்பும், இயற்கை முறை வாழ்க்கையும் காரணமாக நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது — தனது 100வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் உற்சாகமாகக் கொண்டாடிய இந்த பாட்டி.
திருப்பூர் ஜீவா காலனி பகுதியை சேர்ந்தவர் ராமத்தாள். நூறு வயதை தாண்டி இன்று ராமத்தாளுக்கு 101 ஆவது வயது துவங்கிய நிலையில்., ராமாத்தாளின் குடும்பத்தார் சார்பில் அவரது 101 வது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாட குடும்பத்தார் முடிவு செய்தனர். அதன்படி, திருப்பூர், கோவை என பல்வேறு ஊர்களில் வசிக்கும் மகள்,பேரன்,பேத்திகள் என அனைவரும் ஒன்று சேர்ந்து திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் அரங்கில் ராமாத்தாளின் 101 வது வயது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக குடும்பத்தாரால் கொண்டாடப்பட்டது.
அனைவரும் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி சந்தோசமாக ஆடல் பாடல் போன்ற நிகழ்ச்சிகளுடன் பாட்டியின் பிறந்தநாளை கொண்டாடினர். மேலும் பாட்டியிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். சிறிய குழந்தைக்கு பாட்டியின் ஆசிர்வாதம் பெற வைத்தனர்.
திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் வசிக்கும் ராமாத்தாளின் மகன், மகள், பேரன்,பேத்த,எள்ளு பேரன், எள்ளு பேத்தி, கொள்ளு பேரன்,கொள்ளுப் பேத்தி என ஏழு தலைமுறைகளை கண்ட பாட்டியின் பிறந்தநாளை ஒன்று கூடி குடும்பத்தார்கள் சந்தோசமாக கொண்டாடினர்.
இது குறித்து அவர் குடும்பத்தார் தெரிவிக்கையில், பாட்டி அவர்கள் தங்கள் வாழ்நாளில் சரியான வாழ்வியல் முறையையும், நேர நிர்ணயத்தையும் கடைபிடித்து வாழ்ந்ததாகவும், அவர் போலவே இனி வரும் குழந்தைகளும் சரியான வாழ்வியல் முறைகளை கடைபிடித்து வாழ வேண்டும் எனவும் அதற்காக அவரிடம் ஆசீர்வாதம் பெற இந்த விழாவை கொண்டாடியதாக தெரிவித்தனர்.
பேத்தி சுவாதி கூறுகையில், ஏழு தலைமுறைகளை கண்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும்., இத்தருணத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும்., அனைவரும் உடல் நலத்தோடு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என தெரிவித்தார். மேலும் தன்னுடைய பாட்டி ஒரு நாள் கூட பேப்பர் படிக்காமல் இருந்ததில்லை என்றும் அத்துடன் நேர மேலாண்மையை மிகவும் சரியாக கடைப்பிடிப்பார் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், ”அவர்களின் முடி சில வருடங்களுக்கு முன்புகூட கருப்பாகத் தான் இருந்தது. டயட் அப்படி கடைபிடிப்பார். ரொம்ப ஒழுக்கமான பெண். அவர்களிடம் இருந்து நாம் கடைபிடிக்க வேண்டியது அவ்வளவு இருக்கு.நம் குடும்பத்தில் இருக்கின்ற வயது முதிர்ந்தவர்களையும் அவர்களது அனுபவத்தையும் நாம் கொண்டாட வேண்டும் என்ற செய்தியை சமுதாயத்திற்கு சொல்வதற்காகவே இந்த பிறந்தநாளை கொண்டாடுகிறோம்” என்று அவர் கூறினார். “எல்லோரும் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்” என்று அந்தப் பாட்டி கண்ணீர்மல்க தெரிவித்தார்.
இவ்வாறு நூற்றாண்டைக் கடந்தும், ஏழு தலைமுறைகளின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் ஒரே நேரத்தில் பெற்றிருக்கும் ராமாத்தாள் அவர்கள், இன்றைய தலைமுறைக்கு வாழ்வியல் வழிகாட்டியாக திகழ்கிறார். இயற்கையோடு இணைந்த வாழ்க்கை, எளிமையான உணவுமுறை, ஒழுக்கம், மன அமைதி — இதுவே நீண்ட ஆயுளின் ரகசியம் என்பதை அவர் வாழ்வே சாட்சியாக்குகிறது.
பாட்டியின் 101வது பிறந்தநாளை குடும்பத்தினர் ஒன்றாகக் கொண்டாடிய விதம், “குடும்பம் என்றால் பாசம், மரபு, இணைப்பு” என்பதை நினைவூட்டுகிறது. தலைமுறைகள் இணையும் இத்தகைய தருணங்கள் நம் சமூகத்தில் இன்றும் உயிரோடு இருப்பதை உணர்த்தும் அரிய காட்சி இதுவாகும்.

