\
1,000+ CV Shanmugam Supporters Quit AIADMK in Protest
சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள்Pt web

சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் கூண்டோடு ராஜினாமா.. விழுப்புரம் மாவட்ட அதிமுகவினர் ஆவேசம்!!

சி.வி. சண்முகத்திற்கு மீண்டும் மாவட்ட செயலாளர் பதவி வழங்காத நிலையில், அதிருப்தியில் இருந்து வந்த ஆதரவாளர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் இன்று ராஜினாமா செய்துள்ளனர்.
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற அதிமுக, 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. அதிமுகவின் தோல்வியைத் தொடர்ந்து, அக்கட்சியில் தொடர்ந்து உட்கட்சிப் பூசல்கள் தொடர்ந்து அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக தொடர்ச்சியான தோல்விகளுக்கு பொறுப்பேற்று கே. பழனிசாமி தனது பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பினர் போர் கொடித் தூக்கினர். இதையடுத்து, அவர்களின் கட்சிப் பதவியை பறித்தார் கே. பழனிசாமி. எனினும், தற்போது இருதரப்புக்கிடையேயான மோதல் போக்கு சற்று தணிந்திருக்கும் நிலையில், எஸ். பி. வேலுமணிக்கு அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

பழனிசாமி - சிவி சண்முகம்
பழனிசாமி - சிவி சண்முகம்pt

எனினும், சி.வி. சண்முகத்திற்கு அவரிடம் இருந்து பறித்த விழுப்புரம் மாவட்ட செயலாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்படவில்லை. இதனால், அம்மாவட்ட சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருந்து வந்த சூழலில், புதிதாக பொறுப்பு வழங்கப்பட்ட மாவட்ட செயலாளர் தரப்புக்கும் சி.வி.சண்முகம் தரப்புக்கும் மோதல் இருந்து வந்தது. இந்தநிலையில், சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் சிலரை கடந்த வாரம் பொறுப்பிலிருந்து பழனிசாமி நீக்கினார்.

இந்நிலையில், சி.வி. சண்முகம் தலைமையில் கீழ் தான் கட்சியில் செயல்பட முடியும் எனத் தெரிவித்து விக்கிரவாண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்செல்வன், திண்டிவனம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் ஆகியோர் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு இன்று திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் கே. பழனிசாமிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதுடன், எடப்பாடி பழனிசாமி கட்சியை அழித்து வருவதாகவும் சிவி சண்முகம் தான் விழுப்புரம் மாவட்டத்தின் அதிமுக முகமாக இருந்து வருகிறார் எனவும் அவரை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு கட்சியை வளர்க்க முடியாது எனவும் குரல் எழுப்பினர்.

தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இருந்தபடியே, அதிமுக கட்சிப் பொறுப்பில் இருந்து நாங்கள் விலகுவதற்கான கடிதங்களில் கையெழுத்திட்டனர். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த நிர்வாகிகள், 1,000-க்கும் மேற்பட்டோர் கட்சி மீதான அதிருப்தி காரணமாக ராஜினாமா செய்வதாக தெரிவித்தனர். தொடர்ந்து, அந்தக் கடிதங்களை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு நிர்வாகிகள் கொண்டு சென்ற நிலையில், அங்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே. பழனிசாமி இல்லாததால் அவரது ராஜினாமா கடிதங்களை அலுவலக மேலாளரிடம் கொடுத்திருக்கின்றனர்.

இவ்வாறு, சி.வி. சண்முகத்திற்கு மீண்டும் மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்படாததன் காரணமாக 1000-க்கும் மேற்பட்ட விழுப்புரம் மாவட்ட அதிமுகவினர் கூண்டோடு ராஜினாமா செய்திருக்கும் சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

1,000+ CV Shanmugam Supporters Quit AIADMK in Protest
’எலும்புகள் எல்லோருக்கும் உண்டு..’ திமுக எம்எல்ஏ-க்கு அமைச்சர் வன்னி அரசு கண்டனம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com