100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல் ! ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரையின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடைபெற்று வரும் வருமானவரிச் சோதனையில் 160 கோடி ரூபாய் ரொக்கம், 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து சென்னை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில், 60க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாகச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள செய்யாதுரை உறவினர்களின் வீடுகளில் இருந்து 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாம்பரத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து 19 கிலோ தங்கமும், பெரம்பூரில் இருந்து 81 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. அதே போல் தேனாம்பேட்டை, பெசன்ட் நகர், சேத்துப்பட்டு பகுதிகளில் உள்ள உறவினர்கள் வீடுகளில் இருந்து 160 கோடி ரூபாய் பணம் சிக்கியுள்ளது.
சேத்துப்பட்டில் உள்ள செய்யாதுரை உறவினர் வீட்டு கார் பார்க்கிங்கில் இருந்து 30 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோதனையில் சிக்கிய 160 கோடி ரூபாய் பணம் அனைத்தும் 2000 ரூபாய் நோட்டு கட்டுகள் என கூறப்படுகிறது. பணம் மற்றும் தங்கம் அனைத்தும் செய்யாதுரைக்கு சொந்தமான கார்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சாலை கட்டுமான நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.