கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் பத்து பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து 300 விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது, கச்சத்தீவு அருகே தமிழக மீனவர் ஜஸ்டின் என்பவரது படகு பழுதாகி நின்றுள்ளது. அந்த நேரத்தில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் படகில் இருந்த 10 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றுள்ளனர். சிறைபிடிக்கப்பட்டத் தமிழக மீனவர்கள் படகுடன் காங்கேசன் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, தமிழக மீனவப் பிரதிநிதிகள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை இன்று சந்திக்க உள்ள நிலையில் இந்தச் சிறைபிடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.