காய்ச்சல்: தமிழகம் முழுவதும் 10 பேர் உயிரிழப்பு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பால் 10 பேர் உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயலை சேர்ந்த ஸ்ரீதிவானி, அம்பத்தூரில் ஜெனிதா, சஞ்சனா, திவ்யபாரதி, சிறுமி ஷாய் பெனிதா ஆகியோர் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். அரியலூர் செந்துறை அருகே தேன்மொழி என்ற 5 வயது சிறுமி, திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே 9ஆம் வகுப்பு மாணவி பீர்பானு ஆகியோர் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி அடுத்த வரட்டனபள்ளியில் 8 வயது சிறுவன் மோஹித் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பொட்டிக்குளம் கிராமத்தில் மகாலட்சுமி என்ற 17 வயது சிறுமி காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தார். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே டெங்கு காய்ச்சல் காரணமாக செல்வராஜ் என்ற இளைஞர் உயிரிழந்தார். இந்நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 5 பேர் டெங்கு அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 31 பேர் காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுபாக்கம் அருகே தண்டையார் பேட்டையில் 50க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.