ஊழியர்களின் அலட்சியம் காரணமாக மதுரையில் உள்ள இந்தியன் வங்கியில், 10 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது
மதுரை கீழ ஆவணி மூல வீதியில் இந்தியன் வங்கியின் பிரதான கிளை அமைந்துள்ளது. 4 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில், தரை தளத்தில் வங்கியும், பிற தளங்களில் மண்டல அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவரின் பிரிவு உபச்சார விழா 4ஆவது மாடியில் நடைபெற்றுள்ளது. அதில் பங்கேற்பதற்காக அனைத்து ஊழியர்களும் 4ஆவது தளத்துக்கு சென்றுள்ளனர். தனது அறையை பூட்டிய காசாளர் சக்தி கணேஷ், வங்கியை பூட்டாமல் நிகழ்ச்சிக்கு சென்றிருக்கிறார். வங்கி திறந்து இருப்பதை பயன்படுத்தி உள்ளே புகுந்த கொள்ளையன் ஒருவன், காசாளர் அறையின் மேற்புறத்தின் வழியாக குதித்து, அங்கிருந்த 10 லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளான். வங்கி மேலாளர் சீனிவாசன் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்துள்ள காவல்துறையினர், சிசிடிவி காட்சியின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி ஊழியர்களின் அலட்சியத்தால், 10 லட்ச ரூபாய் கொள்ளைபோன நிகழ்வு மதுரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.