வீட்டுமனைக்கு அனுமதி வழங்க ரூ.10 லட்சம் லஞ்சம்.. திமுக பெண் கவுன்சிலர் பரபரப்பு புகார்.!
சென்னையை அடுத்த திருநின்றவூர் நகராட்சியில் திமுக நகர இலக்கிய அணி அமைப்பாளராக இருப்பவர் BLR யோகானந்தம். இவர், திருநின்றவூர் நகராட்சி 27ஆவது வார்டில் 78 சென்ட் நிலத்தில் வீட்டுமனை பிரிவு அமைத்து வருகிறார்.. இதற்கான அனுமதி கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் CMDAவில் வழங்கப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சி நிர்வாகத்திடம் வீட்டுமனைக்கான அனுமதி பெற திருநின்றவூர் நகராட்சியில் மனு அளித்துள்ளார். இந்நிலையில், அவர்கொடுத்த மனு பல மாதங்களாக கிடப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், நேற்று திருநின்றவூர் நகராட்சியின் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. நகரமன்ற தலைவர் உஷாராணி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், நகராட்சி ஆணையர் ஜீவிதா உள்ளிட்ட அதிகாரிகளும், 20 க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். அப்போது, திமுக நிர்வாகி யோகனந்தத்தின் மனைவியும், 6-வது வார்டு கவுன்சிலருமான தேவி, வீட்டுமனைக்கு அனுமதி வழங்க நகரமன்ற தலைவர் உஷாராணி மற்றும் ஆணையர் ஜீவிதா ஆகியோர் 10 லட்சம் லஞ்சம் கேட்பதாக மன்ற கூட்டத்தில் புகார் தெரிவித்தார்.
தொடர்ந்து, மன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் சிலரும், நகரமன்ற தலைவர் உஷாராணி மற்றும் ஆணையர் ஜீவிதா ஆகியோரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் நகரமன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கூட்டத்தில் இருந்த திமுக கவுன்சிலர்களான 6-வது வார்டு தேவி, 27-வது வார்டு ஜெயக்குமார்,11-வார்டு சந்தோஷ்குமார், 2-வது வார்டு தங்கராஜ் ஆகியோர் கூட்டாக வெளி நடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கவுன்சிலர் தேவி, அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்த போதிலும், வீட்டுமனைக்கு அனுமதி பெற நகர மன்ற தலைவர் மற்றும் ஆணையர் உள்ளிட்டோர் லஞ்சம் கேட்டு வருகின்றனர் எனவும் வருவாய்த் துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திலும் அனைத்து அனுமதிகளும் வாங்கப்பட்டுள்ள நிலையில், ஆறு மாதமாக அலைக்கழித்து வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து, இது குறித்து மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி நிர்வாகம் உள்ளிட்டோருக்கு புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
