கொரோனா பரப்பியதாக குற்றச்சாட்டு: மியான்மர் நாட்டைச் சேர்ந்த 10 பேர் திருவாரூரில் கைது!
கொரோனா வைரஸை பரப்பியதாக கூறி திருவாரூரில் இருந்து மியான்மர் நாட்டைச் சேர்ந்த 10 பேரை காவல்துறையினர் சென்னைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி, டெல்லி மாநாட்டில் பங்கேற்க வந்த மியான்மர் நாட்டைச் சேர்ந்த 13 பேர் மாநாடு முடிந்து, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அவர்களது உறவினர்கள் வீட்டில் தங்கி உள்ளனர். இந்நிலையில், பொது முடக்கத்தை மீறியது, தொற்று நோய் பரப்பும் வகையில் செயல்பட்டது உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் நீடாமங்கலம் காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து 13 பேரில் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, மற்றவர்கள் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், மியான்மர் நாட்டைச் சேர்ந்த 10 பேரை கைது செய்த நீடாமங்கலம் காவல்துறையினர், புழல் சிறையில் அடைப்பதற்காக சென்னை அழைத்து சென்றுள்ளனர்.