“10% இடஒதுக்கீடு பட்டியலினத்தவரை பாதிக்காது” - பிரதமர் மோடி பேச்சு
பொதுப்பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு பட்டியலினத்தவரின் இடஒதுக்கீட்டை பாதிக்காது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, “பாஜக ஆட்சியில் 9 கோடி கழிவறைகள் நாட்டில் கட்டப்பட்டுள்ளன. அதில் 47 லட்சம் தமிழகத்தில் கட்டப்பட்டுள்ளன. தனுஷ்கோடியை பாம்பனுடன் இணைக்க 21,000 கோடி செலவில் திட்டம் நிறைவேற்றப்படும். மதுரை - சென்னை இடையே விரைவு ரயில் தேஜஸ் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரை உட்பட 10 ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மேக் இன் இந்தியா திட்டத்தில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.
கப்பல் போக்குவரத்து துறைமுகமாக தூத்துக்குடி மேம்படுத்தப்படுகிறது. நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு, பட்டியலினத்தவரை பாதிக்காது. ஆனால் தமிழக சில சுயநல சக்திகள் மக்களின் நம்பகத்தை கலைப்பதற்கு முயற்சித்து வருகிறார்கள். தேவந்திர குல வேளாலர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்னை பார்த்தார்கள். அவர்களின் வாழ்வியல் முறைப்பற்றி என்னிடம் பேசினார்கள். அவர்கள் பிரச்னை தொடர்பாக தீர்வு காண நடவடிக்கை எடுத்துள்ளேன்.
மத்திய அரசு ஊழல் மற்றும் சொந்த நலனுக்கான செயல்படுவதை தவிர்த்து வருகிறோம். நாட்டினை ஏமாற்றியவர்கள் உள்நாட்டில் இருந்தாலும், வெளிநாட்டிலிருந்தாலும் நீதி முன்னர் நிறுத்தப்படுவார்கள். ஊழல் செய்தவர்கள் அதற்கான பலனை அனுபவிக்கின்றனர். அதனால் தான் அனைவரும் ஒன்றாக சேர்ந்து, நாட்டின் காவலனாக இருப்பவனை ஒதுக்கிவிட வேண்டும் என நினைக்கின்றனர். அவர்கள் என்ன செய்தாலும், இந்த மோடி மக்களுடன் நிற்பேன்” என்றார். பிரதமர் உரையை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மொழிபெயர்ப்பு செய்தார்.

