1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..!
ஒரு கிலோ கேக் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான பணம் திருப்பி கொடுக்கப்படும் என்ற புது அறிவிப்பு வேலூர் மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது.
வேலூரின் முக்கிய சாலையான அண்ணா சாலையில் தனியார் (டிசி) பேக்கரி ஒன்று இயங்கி வருகிறது. இதனை பாக்கியராஜ் மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரும் இணைந்து நடத்தி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த பேக்கரிக்கு, வாடிக்கையாளர்கள் வருகை இல்லாததால் விற்பனை மந்தமாக நடந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடை விற்பனையை கூட்டவும், வாடிக்கையாளர்களின் வருகையை அதிகரிக்கவும் கடை உரிமையாளர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று 21-ம் தேதி பாக்கியராஜ் மற்றும் சீனிவாசன் ஆகியோர் இணைந்து, பேக்கரிக்கு வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதத்தில், ரூ.495 விலைக்கு 1 கிலோ கேக் மற்றும் அதே விலைக்கு வேறு ஏதேனும் பேக்கரி திண்பண்டங்களை வாங்கினால், 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று சலுகை விற்பனையை அறிமுகம் செய்து கடைக்கு முன்பு அது தொடர்பான பேனரை வைத்தனர்.
இதனை பார்த்த பொதுமக்கள் சிலர் பேக்கரி கடைக்கு சென்று சலுகையை குறிப்பிட்டு பேக்கரி பொருட்களை கேட்டுள்ளனர். அதற்கு கடையிலிருந்த ஊழியர்கள், பெட்ரோலை நேரடியாக தர முடியாது. அதற்கு பதில் 1 லிட்டர் பெட்ரோலுக்கான கூப்பன் வழங்கப்படும். அந்த கூப்பனை நாங்கள் குறிப்பிடும் வேலூரில் உள்ள பெட்ரோல் பங்கில் கொடுத்து பெட்ரோல் வாங்கிக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளனர். அதன்படி 2 பேர் பெட்ரோல் கூப்பனை பெற்று பெட்ரோல் போட்டுள்ளனர்.
இதையடுத்து திடீரென அந்த பெட்ரோல் பங்குகளின் நிர்வாகம் சார்பாக நீங்கள் கொடுத்து அனுப்பும் கூப்பனுக்கு இனி பெட்ரோல் வழங்க முடியாது என்று பேக்கரி கடை உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். மேலும் பெட்ரோல் இலவசம் என அறிவித்த பேக்கரிக்கு அரசியல் ரீதியாக தொந்தரவு வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது பேக்கரியில் ரூ.495 விலைக்கு 1 கிலோ கேக் மற்றும் திண்பண்டங்களை வாங்கினால், 1 லிட்டர் பெட்ரோல் விலைக்கான ரூபாயை கழித்துக்கொண்டு, சலுகை விலையில் வழங்கி வருகின்றனர். அதாவது, 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.87-ஐ கழித்துக்கொண்டு, ரூ.408 விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து கடை உரிமையாளரான பாக்கியராஜியிடம் கேட்டபோது, “மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வேலூர் அண்ணாசாலையில் பேக்கிரி கடை திறந்து 2 வருடங்கள் ஆகியும், கடைக்கு போதுமான விளம்பரமும், விற்பனையும் கிடைக்கவில்லை. எனவே, வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், இந்த பெட்ரோல் சலுகை விற்பனையை அறிமுகம் செய்தோம். ஆனால் இந்த சலுகை விற்பனையை ஆரம்பித்த உடனே இதில் பல சிக்கல் ஏற்பட்டது. பெட்ரோல் பங்க் தரப்பினர், எங்கள் கூப்பன் திட்டத்தை நிராகரித்துவிட்டனர். மேலும், இதனை அரசியல் நடவடிக்கையோடு ஒப்பிட்டு பேசி ஆரம்பித்துவிட்டார்கள். நாங்கள் எங்கள் கடையின் விளம்பரத்துக்காக இந்த பெட்ரோல் சலுகையை அறிமுகம் செய்தோம். அது வேறு திசையை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டது. அதனால், தற்போது ரூ.495க்கு பேக்கரியில் பொருட்களை வாங்கினால், பெட்ரோல் விலைக்கான ரூபாயை கழித்துக்கொண்டு பேக்கரி பொருட்களை விற்பனை செய்து வருகிறோம்” என்றார்.