வாக்கு எண்ணிக்கை மற்றும் ஊரடங்கையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் குவிப்பு
தடையை மீறி தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வாக்கு எண்ணிக்கை மற்றும் ஊரடங்கையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வாக்குகள் என்ணிக்கை நடைபெற உள்ளதால், தமிழகத்தில் உள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவத்தினர், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல்படை, உள்ளூர் போலீசார் என 50 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, சென்னையில் உள்ள லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி உள்ளிட்ட 4 வாக்கு எண்ணும் மையங்களில், 4 அடுக்கு பாதுகாப்புடன், 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே கட்சித் தொண்டர்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக வெற்றிக் கொண்டாட்டங்கள், ஊர்வலங்களை நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதால், கட்சி அலுவலகங்கள், முக்கிய சாலைகள், மையங்களுக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உத்தரவை மீறி கொண்டாட்டங்களில் ஈடுபடும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. அதோடு, முழு ஊரடங்கு என்பதால், பொதுமக்கள் அநாவசியமாக வெளியே வருவதைத் தடுப்பதற்காக, தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்