ஜி.எஸ்.டிக்கு எதிர்ப்பு: 1 லட்சம் ஓட்டல்கள் இன்று மூடல்
ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் ஹோட்டல்களும், மருந்து கடைகளும் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறி, ஹோட்டல் நடத்துபவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்கள் முழுவதும் இன்று ஒரு நாள் ஹோட்டல்களை அடைக்க முடிவு செய்யப்பட்டது. இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சம் ஹோட்டல்களை மூடப்பட்டுள்ளது என்று, ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், ஆன்லைன் மூலம் மருந்து பொருட்கள் விற்பனை நடைபெறுவதை கண்டித்து மருந்து கடைக்காரர்களும் இன்று கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் 8 லட்சம் மருந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சுமார் 20 ஆயிரம் மருந்து கடைகள் காலை முதல் மாலை 6 மணி வரை மூடப்படுகின்றன. அதேநேரத்தில், சென்னை, கரூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள மருந்து வணிகர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.
புதுச்சேரியில் மருந்துக் கடைகளை மூடக்கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி இன்று மருந்துக் கடைகள் மூடப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி ஆட்சியர் எச்சரித்துள்ளார்.