குரூப்4 தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் தேர்வர்கள்! அறிவிப்பு வெளியிட்டது TNPSC!

குரூப்4 தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் தேர்வர்கள்! அறிவிப்பு வெளியிட்டது TNPSC!
குரூப்4 தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் தேர்வர்கள்! அறிவிப்பு வெளியிட்டது TNPSC!

தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (TNPSC) நடத்திய குரூப் 4 தேர்வு 2022 ஜூலை24ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 316 தாலுகாவில் உள்ள 7689 மையங்களில் நடைப்பெற்றது. இதில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளுக்காக சுமார் 1,56,218 பேர், இதில் கலந்துக்கொண்டு தேர்வு எழுதியிருந்தனர். தோராயமாக இதன் முடிவுகள் மூன்றிலிருந்து ஐந்து மாதத்திற்குள்ளாக வெளிவரும் நிலையில் இம்முறை 7 மாதங்களை கடந்தும் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதமாகிய நிலையில் தேர்வு எழுதியவர்களின் மனநிலையும் பதட்டத்திற்குள்ளாகி வருகிறது. இதனை வெளிப்படுத்தும் விதமாக, தேர்வு எழுதியவர்கள் டுவீட்டரில் ஹேஷ்டேக் செய்தும், மீம்ஸ் மூலமும் தங்களது ஆதங்கத்தையும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தேர்வு முடிவுகள் வெளிவர காலதாமதமாவதற்கு காரணம் என்ன? என்பது பற்றி, டிஎன்பிஎஸ்சி அலுவலக வட்டார அலுவலர்கள் வெளியிட்ட அறிக்கையில், ”தேர்வாணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இரு பகுதிகளைக் கொண்ட ஒருங்கிணைந்த விடைத்தாள்களின் இரு பகுதிகளையும் தனித்தனியே இருமுறை ஸ்கேன் செய்து, அதன் பின்னர், விடைத்தாட்களில் செய்துள்ள பிழைகளை கணினி மூலம் அடையாளங்காணப்பட்டு அவற்றை அலுவலர்கள் மூலம் நேரடி சரிபார்ப்பு மற்றும் உறுதிசெய்யும் பணிகளுக்கு அதிகப்படியான கால அவகாசம் தேவைப்படுவதால் முடிவுகள் வெளியிடுவதில் காலதாமதமாவதாக தெரிவித்தது.” மேலும் “இம்மாத இறுதியில்( மார்ச்) தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும், இதுகுறித்து ஆதாரமற்ற செய்திகளையும் வதந்திகளையும் யாரும் நம்பவேண்டாம்” என்றும் தெரிவித்துள்ளது.

இத்தேர்வு எழுதி முடிவை எதிர்நோக்கி காத்திருக்கும் சம்பத் என்பவரிடம் இதுகுறித்து கேட்டப்பொழுது, “இத்தேர்வுக்காக நான் இரவு பகலாக படித்து சிறப்பான முறையில் தேர்வு எழுதி இருக்கிறேன். இதில் நான் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் தேர்வு முடிவுகள் காலதாமதமாக்கப்படுவதால், நியாயமான முடிவு வெளிவரும் என்ற எனது நம்பிக்கை குறைந்து வருகிறது. எனக்கான அரசாங்க வேலை என்ற எண்ணமும் தவிடுபொடியாகிறது. ஏனெனில் முடிவுகள் தாமதிக்கும் நிலையில் இதில் கையீடு முறைகேடுகள் நடைபெற அதிக வாய்ப்புள்ளது. ஆகவே... இனியும் காலம் தாழ்த்தாமல் தேர்வு முடிவுகளை அரசு வெளியிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கையை நாங்கள் எடுக்க ஏதுவாக இருக்கும், ” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் இறுதிக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் தற்போது தேர்வாணையத்தில் துரிதமாக நடைபெற்று வருகின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com