வற்றிப்போனது `தமிழ்க்கடல்’: உடல்நலக்குறைவால் காலமானார் நெல்லை கண்ணன்

வற்றிப்போனது `தமிழ்க்கடல்’: உடல்நலக்குறைவால் காலமானார் நெல்லை கண்ணன்
வற்றிப்போனது `தமிழ்க்கடல்’:  உடல்நலக்குறைவால் காலமானார் நெல்லை கண்ணன்

தமிழறிஞர், `தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானார்.

77 வயதாகும் அவர் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட சில உடல்நல சிக்கல்களால் கடந்த சில தினங்களாக பேசவே முடியாமல் அவர் அவதிப்பட்டு வந்தார். மிகச் சிறந்த தமிழ் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லைக் கண்ணன், மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்த அயராது பணியாற்றியவர். தனது பேச்சாற்றலுக்காகவும், தமிழ் மீதான பற்றுக்காகவும் வாழும் நாள்களிலேயே அறிஞர்கள் பலரால் அவர் தமிழ்க்கடல் என்று போற்றப்பட்டவர்.

நெல்லை கண்ணன் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து `புதிய தலைமுறை’க்கு தெரிவித்த இரங்கல் செய்தியில், “சங்க இலக்கியம் முதல் எங்கள் இலக்கியம் வரை எல்லா இலக்கியங்களையும் நெஞ்சில் எழுதி தனது நா வன்மையால் சமகால சமூகத்துக்கு தமிழ் உணர்வை ஊட்டிக்கொண்டே இருந்தவர் அவர். நம் சம காலத்தின் பெரிய தமிழ்க்கடல், வற்றிவிட்டதென்றே இதை நினைக்கிறேன். அவருடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களும் கூட, அவருடைய மொழியை - அவருடைய உரையை - அவருடைய சொல் வன்மையை மறுத்ததோ வெறுத்ததோ இல்லை. அவரது இழப்பை தமிழ்ச்சமூகம் எப்படி ஈடு செய்யப்போகிறது என்று தெரியவில்லை. அவருடைய மொழியும் தமிழும் புகழும் எப்போதும் வாழும். நெல்லை கண்ணனின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பின்தொடர்வோருக்கும் என் இரங்கல்கள்”என்றார்.

குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாத தளங்களாக மாற்றியவர் நெல்லைக் கண்ணன். காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக பணியாற்றியிற்றியவர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com