‘அப்துல் கலாமிற்காக மரம் நடுவோம்’ - பிறந்த நாளை முன்னிட்டு ட்ரெண்டிங்
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாள் அன்று மரம் நடுவோம் என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி பிறந்தவரான அப்துல் கலாம், இந்திய விஞ்ஞானியாக பணியாற்றினார். அதைத்தொடர்ந்து 2002ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது காலத்தில் இந்திய விண்வெளித்துறை பெரும் வளர்ச்சி கண்டது. இளைஞர்களுக்கு பெரும் எழுச்சியாக திகழ்ந்த இவர், மறைந்த பின்னரும் மக்களால் போற்றப்படுகிறார்.
இந்நிலையில், அப்துல் கலாமின் 88வது பிறந்த தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி சமூக வலைத்தளமான ட்விட்டரில் அப்துல்கலாமிற்காக மரம் நடுவோம் என #plantforkalam என்ற ஹேஷ்டேக்கை பலரும் ட்ரெண்ட் செய்துள்ளனர். குறிப்பாக அப்துல் கலாமின் தீவிர பற்றாலரும், நடிகருமான விவேக் கலாமிற்கு இந்த ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்யுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் தான் மரம் நடும் புகைப்படும் ஒன்றை வெளியிட்டு, அனைவரும் ஒன்று சேர்ந்து உலகை சிறப்பாக்க மரம் நட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து பலரும் #plantforkalam என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ட்வீட் செய்து வருவதால் சென்னை அளவிலும், இந்திய அளவிலும் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.