மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை இறந்துவிட்டது - பெற்றோர் கண்ணீருடன் குற்றச்சாட்டு
வேலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தை இரண்டு நாட்களில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை தாலுகா, கரிமேடு கிராமத்தை சேர்ந்த தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் மோகன் குமார். இவர் தனது மனைவி கிரிஜாவுடன் வசித்து வந்த நிலையில், பிரசவத்திற்காக மனைவியை காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரு தினங்களுக்கு முன்பு அனுமதித்தார். சுகப்பிரசவத்தில் கிரிஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தொடர் சிகிச்சையில் இருந்து வந்த பச்சிளம் குழந்தை நேற்று இரவு முதல் தாய்ப்பால் அருந்தவில்லை என மருத்துவர்களிடம் பெற்றோர்கள் கூறியுள்ளனர். மருத்துவர்கள் இரவு முழுவதும் அலட்சியமாக செயல்பட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே குழந்தையை காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், மருத்துவமனையில் சோதித்து பார்த்தபோது குழந்தை இறந்திருந்ததாகவும் தெரிவித்தனர். மருத்துவர்களின் அலட்சியப்போக்கு தங்கள் குழந்தையின் உயிரை பலி வாங்கி விட்டதாகவும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு சிறப்பாக இருக்கும் என நம்பியது ஏமாற்றம் அளித்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினர்.
பிறந்து இரு நாட்களே ஆன நிலையில் பச்சிளங்குழந்தை இறந்த சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் குழந்தையின் இறப்பிற்கு காரணமான மருத்துவர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.