“ஒரு கட்சியை சேர்ந்தவர் வேறு சின்னத்தில் போட்டியிட முடியாது” - தேர்தல் ஆணையம்

“ஒரு கட்சியை சேர்ந்தவர் வேறு சின்னத்தில் போட்டியிட முடியாது” - தேர்தல் ஆணையம்
“ஒரு கட்சியை சேர்ந்தவர் வேறு சின்னத்தில் போட்டியிட முடியாது” - தேர்தல் ஆணையம்

ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் வேறோரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டது செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தேர்தல் விதிகளின் படி ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ள ஒருவர், அந்த கட்சியிலிருந்து விலகாமல் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதமானது எனவும், இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்சியின் உறுப்பினராக இல்லாத ஒருவரை அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதி அளித்தது தேர்தல் நடைமுறைகளை மோசடி செய்வது ஆகாதா ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் தேர்தலில் கட்சியின் பெயர், தேர்தல் அறிக்கையை விட,  சின்னமே பெரும்பங்காற்றுகிறது என்றும், சின்னத்தை வைத்து தான் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். தேர்தலில் வெற்றி, தோல்வியை விட நேர்மையாக போட்டியிடுவது தான் முக்கியம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் தரப்பு, ஒரு கட்சியை சேர்ந்த ஒருவர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என விதி இருந்தாலும், தேர்தல் அதிகாரி வேட்பு மனுவை ஏற்று கொண்டால் அதை எதிர்த்து தேர்தல் வழக்கு தான் தொடர முடியும் என்று கூறியது. அத்துடன் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புகளின் அடிப்படையில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதை சுட்டிகாட்டிய நீதிபதிகள், வெற்றி பெற்றது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் வெற்றி பெற்ற எம்பிக்கள் நவம்பர் 12ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com