” என் பெற்றோர் என்னை கடத்தவில்லை” - கலப்பு திருமணம் செய்த பெண் தகவல்
கலப்புத் திருமணம் செய்து கொண்டதால் தன் மனைவியை அவரின் பெற்றோர் கடத்தி சென்றுவிட்டதாக கணவர் புகார் தெரிவித்திருந்த நிலையில், அப்பெண்ணோ தன்னை யாரும் கடத்தவில்லை எனக் கூறியுள்ளார்.
கோவை இடையர்பாளையம் லூனா நகர் வித்யா காலனியை சேர்ந்த கார்த்திகேயன் (35) என்பவரும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சக்தி தமிழினி பிரபா (25) என்பவரும் காதலித்து வந்த நிலையில், பெண் வீட்டில் திருமணத்திற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டதையடுத்து கடந்த 5-ஆம் தேதி கோவையில் சுயமரியாதை காதல் பதிவு திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி, மனைவியின் குடும்பத்தார் தன்னை தாக்கிவிட்டு மனைவியை கடத்திச் சென்றுவிட்டதாகச் கார்த்திகேயன் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பெண்ணின் தந்தை காவல்துறையில் பணியாற்றி ஓய்வுப்பெற்ற நபர் என்பதும், ஆணின் வீட்டில் பொருளாதார வசதி இல்லாததால் பெண் வீட்டார் இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருந்த நிலையில் திருச்சியில் முகாமிட்டு இருந்த தனிப்படை போலீசார் சக்தி தமிழினி பிரபாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பிரபா தன்னை பெற்றோர் கடத்தவில்லை என்றும் இரு வாரங்களில் பெற்றோரை சமாதானப்படுத்திய பின் கணவர் வீட்டிற்கு சென்று விடுவேன் என்று கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து காவல் துறையினரிடம் எழுத்துப்பூர்வமாக சக்தி தமிழினி பிரபா கடிதம் எழுதி கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து சக்தி தமிழினி பிரபா மற்றும் அவரது பெற்றோர் வரும் புதன் கிழமை கோவை நீதிமன்றத்தில் ஆஜராவதாக போலீசாரிடம் உறுதியளித்தைத் தொடர்ந்து தனிப்படை கோவைக்கு திரும்பியது. இருவரும் மாற்று சமூகத்தினர் என்பதும் இதில் குறிப்பிடத்தக்கது.