“வெயில் காலத்தில் கரண்ட் கட் ஆகாது” - அமைச்சர் தங்கமணி உறுதி
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் மின்வெட்டு பிரச்னை இருக்காது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு தற்போதே தமிழகம் முழுவதும் கடும் வெயில் நிலவுகிறது. கடந்த ஆண்டு மழைப்பொழிவும் குறைவு என்பதால், தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்படும் நிலை வந்துள்ளது. அதேசமயம் கோடை காலத்தில் அதிக வீடுகளில் ஏ.சி-கள் பயன்படுத்தப்படும் என்பதால், மின்தட்டுப்பாடு ஏற்பட்டு மின்சாரத்தடை ஏற்படலாம் என்று கருத்து பரவலாக காணப்படுகிறது. ஆனால் அதுபோன்று மின்சாரத்தடை எதுவும் ஏற்படாது என அத்துறை அமைச்சரான தங்கமணி உறுதிப்படுத்தியுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோடை காலத்திற்கும் குறைந்த மின் அழுத்தத்திற்கு தொடர்பில்லை என்றார். கோடை காலத்தின் மின்சாரத்தேவை 15,000 மெகாவாட் அதிகரிக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்த அவர், அதற்கு தேவையான மின் உற்பத்தி இருப்பதாகவும் கூறினார். எனவே தமிழகத்தில் வெயில் காலத்தில் மின் தடை இருக்காது என்றும் அவர் உறுதிப்படுத்தினார். மேலும், உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் விவகாரத்தில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாக கூறினார்.