“நித்யானந்தா இறந்த பிறகே அவரது உயில் பற்றி தெரியும்” - ஞானப்பிரகாச பரமாச்சாரியார்
நித்யானந்தா இறந்த பிறகு தான் அவர் என்ன உயில் எழுதி வைத்திருக்கிறார் எனத் தெரியும் என்று தொண்டை மண்டல மடத்தின் மடாதிபதி ஞானப் பிரகாச பரமாச்சாரியார் தகவல் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் உள்ள மிகப் பழமையான மடங்களில் ஒன்று தொண்டை மண்டல மடம். இந்த மடத்தின் 232-வது ஆதீனமாக ஞானப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து வருகிறார். இந்த மடத்திற்கு தற்போது ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மடத்தின் இளைய மடாதிபதியாக வருவதற்கு நித்யானந்தா கடந்த சில ஆண்டுகளில் இரண்டு முறை முயற்சி செய்ததாகவும் கூறப்பட்டது. நித்யானந்தா பக்தர்கள் சிலர் இந்த மடத்தில் வந்து தங்கியதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சர்ச்சை ஏற்பட்டு அச்சமுதாய மக்கள் போராட்டங்களை நடத்தினர். இதைத் தொடர்ந்து பலரும் வெளியேறி தற்போது ஓரிருவர் மட்டும் இந்த மடத்தில் தங்கியுள்ளனர். சிலர் அவ்வப்போது வந்து செல்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் நித்யானந்தா தன் பக்தர்களிடம் இணையதளம் வழியாக பேசுகையில், தனது மடத்துக்கு பக்தர்கள் கொடுக்கும் பணமெல்லாம் தன்னை வளர்த்த திருவண்ணாமலை காஞ்சிபுரம் மற்றும் மதுரை ஆகிய 3 குருபரம்பரையின் நன்மைக்குச் செலவிட வேண்டும் என்று உயில் எழுதி வைத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
மேலும் அந்த மூன்றில் காஞ்சிபுரம் குருபரம்பரையையும் சேர்த்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாகவும் உயில் எழுதி வைத்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொண்டை மண்டல பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தொண்டை மண்டல மடத்தின் மடாதிபதி ஞானப் பிரகாச பரமாச்சாரிய சுவாமிகளிடம் கேட்டபோது, “இந்த உயில் தொடர்பாக அவர் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. அவர் தெரிவித்தால்தான் என்ன எழுதி வைத்துள்ளார் என்பது தெரியும். நம்மிடம் யாராவது காபி சாப்பிடுங்கள் என்று சொன்னால் வேண்டாம் என்று சொல்ல மாட்டோம் அல்லவா. அதுபோல் நித்யானந்தா, ஆசிரமத்திற்கு சொத்தை தருகிறேன் என்று கூறினால் வேண்டாம் என்று கூற முடியாது.
நித்யானந்தா இறந்த பிறகு தான் தெரியும் அவர் என்ன உயில் எழுதி வைத்திருக்கிறார், அவருடைய சொத்து எப்படி அமலுக்கு வருகிறது என்று கூற முடியும்.
யாராவது நன்கொடை கொடுத்தால் நாம் ஏன் வேண்டாமென்று சொல்ல வேண்டும். நன்கொடை கொடுப்பது மற்றும் பிச்சை போடுவது எல்லாம் அவர்களுடைய விருப்பம். ஏதேனும் கொடுத்தால் பெற்றுக்கொள்வது போல் பெற்றுக்கொள்வோம்” என்றார்.