”தமிழ்ப்புலவராக வேண்டும் என்பதுதான் எனது ஆசை” -’தமிழைத் தேடி’ பரப்புரையில் ராமதாஸ் ஆதங்கம்

”தமிழ்ப்புலவராக வேண்டும் என்பதுதான் எனது ஆசை” -’தமிழைத் தேடி’ பரப்புரையில் ராமதாஸ் ஆதங்கம்
”தமிழ்ப்புலவராக வேண்டும் என்பதுதான் எனது ஆசை” -’தமிழைத் தேடி’ பரப்புரையில் ராமதாஸ் ஆதங்கம்

”தமிழ் புலவர் ஆக வேண்டும் என்பது தான் எனது ஆசையாக இருந்தது. ஆனால் அதிக மதிப்பெண் பெற்ற காரணத்தால் எனது நண்பர் ஒருவர் கூறியதால்தான் மருத்துவம் படித்தேன்” என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

புதுச்சேரியில் பெயர் பலகைகளில் தமிழுக்கு முன்னுரிமை இல்லையெனில் கருப்பு மையை கையில் தூக்குங்கள் என தமிழைத்தேடி விழிப்புணர்வுப் பரப்புரைக் கூட்டத்தில் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

அழிவின் விளிம்பிலிருந்து அன்னைத் தமிழைக் காப்பதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ் ’தமிழைத்தேடி’ விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை, சென்னையில் தொடங்கி மதுரை நோக்கி தொடங்கினார். இந்நிகழ்வின் 3 ஆம் நாள் பரப்புரை நிகழ்ச்சி புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், கோ.க.மணி எம்.எல்.ஏ, புதுவை தமிழ்ச்சங்க தலைவர் முத்து உள்ளிட்ட தமிழறிஞர்கள் பங்கேற்று உரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய ராமதாஸ், ”சென்னையை விட அதிக அளவில் புதுச்சேரியில்தான் தமிழ்ச்சங்கம் உள்ளது. அதனால் அவர்களை பாராட்டுகிறேன். பாரதியார் புதுச்சேரியில் இருந்து தான் தமிழை வளர்த்தார். பாரதி பாடல்களை படிக்கும் போது நம்மை அறியாமலே ஒரு வேகம் வரும். தமிழ் நாட்டை விட புதுவையில் பிறமொழி கலப்பு குறைவாகவும், தமிழ் அமைப்புகள் அதிகமாகவும் உள்ளது. தனித்தமிழை தோற்றுவிக்க ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு தமிழ் அமைப்புகள் பணிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்திய அவர், சிங்கப்பூரில் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் கட்டாயமாக தமிழ் படிக்க வேண்டும் என்று உள்ளது. ஆனால் தமிழகத்தில் கட்டாயமாக தமிழ் பாடமாக்கி 17 ஆண்டுகள் ஆகியும், அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. புதுச்சேரியில் அதுவும் கூட இல்லை என குற்றஞ்சாட்டினார்.

மேலும் தமிழ் புலவர் ஆக வேண்டும் என்பது தான் எனது ஆசை, ஆனால் அதிக மதிப்பெண் பெற்றுள்ள காரணத்தால் நண்பர் ஒருவர் கூறியதால் மருத்துவம் படித்தேன். தமிழுக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன் என்று நான் கூறுவது, என்னை பாரட்ட வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. அழிந்துவரும் தமிழை அழியாமல் காக்கவே, இந்த பயணம் செல்கிறேன். மொழிகளில் மூத்த மொழியான தமிழ் மொழியை இழந்து கொண்டிருக்கிறோம்.

ஆகவே புதுச்சேரியில் உள்ள தமிழறிஞர்களிடம் ஒன்றை கேட்டுக்கொள்கிறேன்; புதுச்சேரியில் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அறிவிப்பு பலகைகளிலும், தமிழ் தான் முதல் மொழியாக இருக்க வேண்டும் என்று முன்னறிவிப்பு செய்துவிட்டு, தமிழுக்கு முன்னுரிமை கொடுக்காமல் பிறமொழியை முதன்மைப்படுத்தினால் பிறகு கருப்பு மையை கையில் எடுங்கள், நானும் உங்களுடன் வருகின்றேன்” என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் அரசு உங்களுக்கு ஒத்துழைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. போராட்டம் தானே வாழ்க்கை, தமிழுக்காக போராடுவதில் தவறில்லை. அழிந்து வரும் தமிழை தேடி போகின்றேன். ஆனால் எந்த மொழிக்கும் நான் எதிரானவன் இல்லை என ராமதாஸ் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com