தயாரிப்பாளர் சங்கத்தின் சீல் நாளை காலை 9.30 மணிக்கு திறக்கப்படும் என அச்சங்கத்தின் தலைவரும், நடிகருமான விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விஷால், “தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். நாளை காலை 9.30 மணிக்கு அதிகாரிகள் தயாரிப்பாளர் சங்க சீலை உடைத்து திறப்பார்கள். இசையமைப்பாளர் இளையராஜாவை கவுரவ படுத்த வேண்டியது தயாரிப்பாளர் துறையின் கடமை. அவரை கவுவர படுத்துவதில் என்ன பிரச்னை? என்று தெரியவில்லை. ஆனால், திட்டமிட்ட படியே, கண்டிப்பாக இளையராஜாவை கவுரவப் படுத்துவோம்.
தயாரிப்பாளர் சங்கத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நாங்கள் எப்படி நிறைவேற்றுகிறோம் என்பது உறுப்பினர்களுக்கு தெரியும். ஆனால் சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்கள், நாங்கள் 7 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக சொல்கிறார்கள். உண்மையில் இங்கு மறைப்பதற்கு எதுவுமில்லை. நாங்கள் கணக்குகளை குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களிடம் கொடுப்போம். ஆனால் அதை பார்க்காமல் மீண்டும் குற்றம்சாட்டுவார்கள். இது நடிகர் சங்கத்திலும் நடக்கும் ஒரு பிரச்னை தான்.
நான் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது. நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன். அரசியலில் யார் வேண்டுமென்றாலும் ஈடுபடலாம். அனைத்து இளைஞர்களும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். மக்களுக்கு நல்லது செய்வதற்கு பெயர் தான் அரசியல்” என்றார். முன்னதாக இன்று, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் வைத்த சீலை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.