“தேமுதிகவிற்கு எத்தனை தொகுதிகள் என்பது நாளை தெரியும்” - ஓபிஎஸ் சூசகம்
தேமுதிகவிற்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என இன்றோ அல்லது நாளையோ அறிவிக்கப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்திலுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வீட்டிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்றார். அவருடன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர். சுமார் ஒருமணிநேரம் அவர்களின் சந்திப்பு நடைபெற்றது. இதில் மக்களவைக் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “தேமுதிக தலைவர், கேப்டன் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரிக்கவும், மரியாதை நிமித்தமாக அவரை சந்திக்கவும் வந்திருந்தோம். அவர் பூரண குணமடைந்து, மிகவும் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். எங்களுடன் மிக மகிழ்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் பேசினார். நாங்களும் அவர் நீடுடி வாழ வேண்டும் என விருப்பத்தை தெரிவித்தோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “அதிமுகவின் கூட்டணியில் தேமுதிக இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது தொடர்பாக ஏற்கனவே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்றோ அல்லது நாளை அதில் நல்ல முடிவு எட்டப்படும். 6 தேதிக்குள் அனைத்து கூட்டணி கட்சிகள் குறித்த முடிவுகள் எடுக்கப்படும். நாளை மறுநாள் (6ஆம் தேதி) பிரதமர் மோடி பங்கேற்கும் மாநாட்டில் அனைத்து தலைவர்களும் கலந்துகொண்டு, யார் பிரதமராக வரவேண்டும் என எழுச்சி உரையாற்றவுள்ளனர். தேமுதிகவிற்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது இன்றோ, நாளையோ தெரியும்” என்று கூறினார்.