'நீரிலும், நிலத்திலும் செல்லும் ஹோவர் கிராப்ட் கப்பல் !
மணல், கடல், கடற்கரை மட்டுமின்றி பாறைகள், பனிக்கட்டிகள் மிகுந்த பகுதிகளிலும் வேகமாக பயணிக்கும் இந்திய கடற்படையின் அதிநவீன ரோந்து கப்பல் 'ஹோவர் கிராப்ட்' .
கடலிலும், நிலத்திலும் செல்லக்கூடிய அதிநவீன ரோந்து கப்பலான ஹோவர் கிராப்ட் கப்பல் இந்திய கடற்படையில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்வதற்கு கடலூர் மார்க்கமாக தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதிக்கு வந்தது. இதனை பொதுமக்கள் வியப்புடன் பார்த்ததுடன் அதனுடன் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
கடல் வழியாக மது வகைகள், தங்கம், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் கடத்தப்படுவதை தடுக்கவும், இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்களை கண்காணிக்கவும் இந்திய கடலோர காவல்படையினர் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி ரோந்து பணிக்காக அவர்கள் பயன்படுத்தும் கப்பல்களில் முக்கியமானதாகவும், நவீனமானதாகவும் பார்க்கப்படுவது 'ஹோவர் கிராப்ட்'.
ஹோவர் கிராப்ட் கப்பல்கள் பிரிட்டனில் தயாரிக்கப்பட்டதாகும். கடலோர காவல்படை ரோந்து பணிக்காக பிரிட்டனிலிருந்து ஆறு ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பலை இந்திய கடற்படை வாங்கியுள்ளது. ஒரு ஹோவர் கிராப்ட்டின் விலை 20 கோடி ரூபாயாகும். மணிக்கு 45 நாட்டிகல் வேகத்தில் செல்லக்கூடிய இந்த ஹோவர் கிராப்டில் அதிகபட்சமாக 15 பேர் வரை செல்ல முடியும்.
கம்ப்யூட்டர், இன்டர்நெட், தொலைபேசி போன்ற தொலை தொடர்பு சாதன வசதிகள் அனைத்தும் இதில் உள்ளன. ஆபத்து நேரத்தில் தப்பிச் செல்ல உதவும் ரப்பர் படகு வசதியும் ஹோவர் கிராப்டில் உள்ளது. ஏர்-குஷன் வாகனம் அல்லது ஏசிவி என்றும் அழைக்கப்படும் ஹோவர் கிராப்ட், மணல், கடல், கடற்கரை மட்டுமின்றி பாறைகள், பனிக்கட்டிகள் மிகுந்த பகுதிகளிலும் வேகமாக பயணிக்கும் திறன் வாய்ந்தது.

