”இதயம், கண், கணையம், நுரையீரல், கிட்னி” என தானம் செய்யப்பட்ட திண்டுக்கல் இளைஞரின் உடல்!
விபத்தில் சிக்கி கோமாவிற்கு சென்ற திண்டுக்கல் இளைஞரின் இதயம், கண், கணையம் , நுரையீரல் , கிட்னி முதலிய உடல் உறுப்புகள் ஆம்புலன்ஸ் மூலமாக மதுரையிலிருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் என்ற தொழிலாளி. திருப்பூரில் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 4 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த வாரம் விடுமுறைக்காக சொந்த ஊரான செங்குளத்திற்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த திங்கள் கிழமையன்று சொந்த ஊரில் பைக்கில் சென்றபோது, ஏற்பட்ட சாலை விபத்து காரணமாக தலையில் படுகாயம் அடைந்த நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கார்த்திக் கோமா நிலைக்குச் சென்ற நிலையில் அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவெடுத்தனர்.
இதனையடுத்து அவருடைய இதயம், கண், கணையம், நுரையீரல், கிட்னி உள்ளிட்ட ஐந்து உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் 3 ஆம்புலன்ஸ்கள் மூலமாக மதுரை விமான நிலையத்திற்கும், பெரம்பலூருக்கும் கொண்டு செல்லப்பட்டது.
இளைஞர் கார்த்திக்கின் இதயம் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனைக்கும், நுரையீரல் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கும், கணையம் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி மருத்துவமனைக்கும், ஒரு கிட்னி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு கிட்னி மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கும், கண்கள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கும் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் பணிபுரிந்து வந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் அவர் அளித்த உடல் உறுப்பு தானம் மூலமாக பலர் பயன் பெற்றுள்ளனர். ஆம்புலன்ஸ்கள் தங்கு தடையின்றி செல்வதற்கு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலிருந்து, மதுரை விமான நிலையம் மற்றும் பெரம்பலூர் வரைக்கும் போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீரமைத்துக் கொடுத்தனர்.