’ஆளுநர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்த கடிதத்தின் நகல் வேண்டும்’ - அற்புதம்மாள் புதிய மனு
பேரறிவாளன் பரோல் விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள கடிதத்தின் நகலை வழங்குமாறு அற்புதம்மாள் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் அற்புதம்மாள் தாக்கல் செய்துள்ள மனுவில், ’பேரறிவாளன் விவகாரத்தில் பல்நோக்கு விசாரணை ஆணையத்தின் விசாரணை முடியும் வரை எந்த முடிவையும் எடுக்க முடியாது’ என உயர்நீதிமன்றத்துக்கு அளித்த கடிதத்தில் தமிழக ஆளுநர் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் இவ்விதம் கூறிவிட்டு, ’பேரறிவாளனை விடுதலை செய்ய தனக்கு அதிகாரம் இல்லை, குடியரசுத்தலைவருக்குத் தான் உள்ளது என உச்சநீதிமன்றத்தில் மாறுபட்ட கருத்தை தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார் என்றும், ஆளுநர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கடிதத்தின் நகல் வேண்டும் என்றும் அற்புதம்மாள் கோரியுள்ளார்.
இந்த மனு, நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்த விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் வழங்கி உத்தரவிட்டார். வழக்கை பேரறிவாளன் தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரதான மனுவுடன் இணைத்து விசாரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.