இலவச எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா சேவை அளிக்க முடிவு - மத்திய அரசு

இலவச எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா சேவை அளிக்க முடிவு - மத்திய அரசு

இலவச எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா சேவை அளிக்க முடிவு - மத்திய அரசு
Published on

கேரளாவின் கொச்சி நகரில் கடற்படை விமான ஓடுதளம் வரும் திங்கட்கிழமை முதல் பயணிகள் விமான சேவைக்கு பயன்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் நூற்றுக்கணக்கான மீட்புப் படையினருக்கு 90க்கும் மேற்பட்ட விமானங்களும், 500 மோட்டர் படகுகளும் உதவி செய்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழு, அமைச்சரவை செயலாளர் பி.கே. சின்ஹா தலைமையில் மூன்றாம் முறையாகக் கூடி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஆய்வு செய்தது. கேரள தலைமைச் செயலாளரை காணொலி மூலம் தொடர்பு கொண்டு தற்போதைய வெள்ள நிலை, மற்றும் மீட்பு பணி குறித்து குழுவினர் கேட்டறிந்தனர். பிரதமரின் உத்தரவுப் படி மேற்கொள்ளப்பட்டுள்ள மீட்புப் பணியில் முன்னெப்போதும் இல்லாத அளவு, 67 ஹெலிகாப்டர்கள், 24 விமானங்கள், 548 மோட்டர் படகுகள் மற்றும் முப்படைகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 ஹெலிகாப்டர்களை அனுப்பும்படி கடற்படை, விமானப்படை மற்றும் ஓஎன்ஜிசிக்கு அமைச்சரவைச் செயலாளர் உத்தரவிட்டதாகவும், அவை இன்றைக்குள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

மத்திய அமைச்சர்கள் பலரும் 3 லட்சம் உணவுப் பொட்டலங்கள், 6 லட்சம் மெட்ரிக் டன் பால், தலா ஒரு லட்சம் லிட்டர் நீரை சுத்தப்படுத்தும் 150 கருவிகள் உள்ளிட்டவற்றை வழங்கியிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஈரோடு மற்றும் மதுரை வழியாக திருவனந்தபுரத்திற்கு ரயில்கள் இயக்கப்படுவதாகவும், திருவனந்தபுரம் முதல் எர்ணாகுளம் வரை அனைத்து ரயில் நிலையங்களிலும் உணவு மற்றும் மருந்துகள் விநியோகிக்க ரயிலை இயக்க ரயில்வே துறை முன்வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை முதல் கொச்சி கடற்படைவிமான தளத்தின் ஓடுதளத்தில் பயணிகள் விமானத்தை இயக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார சேவை, பெட்ரோல் பங்குகள், சமையல் எரிவாயு விநியோகம், சுகாதார வசதிகள் உள்ளிட்டவற்றை வழங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 

தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்தும் நோக்கில் ஒரு செல்போன் சேவையை பயன்படுத்துவோர் மற்ற நிறுவனத்தின் டவர்களிலும் தங்கள் இணைப்பை பயன்படுத்திக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அனைத்து நிறுவனங்களும் இலவச எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா சேவை அளிக்க முன்வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்தவுடன் பணியில் அமர்ந்த மருத்துவ குழுக்கள் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை சற்று தணிந்திருப்பதாகவும், அடுத்த சில நாட்களில் மேலும் தணியும் என எதிர்பார்ப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com