அதிமுகவுக்கு சுயநலமில்லாத தலைமை தேவை: அதிருப்தி எம்.எல்.ஏ கலைச்செல்வன்
அதிமுகவுக்கு சுயநலமில்லாத புதிய தலைமை தேவை என்று அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ கலைச்செல்வன் கூறியுள்ளார்
அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. ஒற்றைத் தலைமை தேவை என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில் நடக்கும் இந்த கூட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தக் கூட்டத்துக்கு, சட்டப்பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பிய அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இதனால் அவர்கள் பங்கேற்கவில்லை. ராஜன் செல்லப்பாவை அடுத்து அதிமுகவில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்திய குன்னம் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்காதது பற்றி விருத்தாசலம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கலைச்செல்வனிடம் கேட்ட போது, ‘’இந்தக் கூட்டத்துக்கு எனக்கு அழைப்பு வரவில்லை. ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்தபோது, அதிமுக தலைமைக் கழகத்தில் இருந்து தொலைபேசி வாயிலாக எங்களுக்கு கூட்டத்துக்கான அழைப்பு வரும். நான் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்தான் என்று சொல்லி விட்டேன். இருந்தும் அழைப்பு விடுக்காதது ஏன் என்பது தெரியவில்லை. அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை என்பது கட்டாயம். இரட் டைத் தலைமை காரணமாக, அதிமுக வாக்கு வங்கி குறைந்துவிட்டது.
அதை தேர்தலில் பார்த்துவிட்டோம். இப்போது தலைமை பொறுப்பில் இருக்கிறவர்கள் சுயமாக செயல்படுகிறார்களா என்கிற சந்தேகம் எங்க ளுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கும் இருக்கிறது. பின்புலத்தில் யாரோ இருக்கிறார்கள். நமது குன்னம் ராமச்சந்திரன் சொன்னதுபோல, சுயநலமில்லாத புதிய தலைமை வேண்டும். தொண்டர்கள், ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தலைமை வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து’’ என்றார்.