"அதிமுகவின் குறைகளை காண்பதிலேயே அதிக நேரம் செலவிடுகிறது திமுக" - வானதி ஸ்ரீனிவாசன்

"அதிமுகவின் குறைகளை காண்பதிலேயே அதிக நேரம் செலவிடுகிறது திமுக" - வானதி ஸ்ரீனிவாசன்
"அதிமுகவின் குறைகளை காண்பதிலேயே அதிக நேரம் செலவிடுகிறது திமுக" - வானதி ஸ்ரீனிவாசன்

அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் உள்ள குறைகளை கண்டறிவதிலேயே, திமுக அரசு நேரம் செலவிடாமல் ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளில் நேரத்தை செலவிடலாம் என பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் தனியார் அமைப்பு (மக்கள் சேவை மையம் மற்றும் ஷசம் அமைப்பு) சார்பில் நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கொன்றில் நடைபெற்றது. மேலும் ‘மோடி மகள் நலத்திட்ட உதவிகள்’ வழங்கும் நிகழ்ச்சியும் அப்போது நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மிதிவண்டிகள், தையல் மிஷின்கள், மேலும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினர் சிறு தொழில் தொடங்குவதற்கு உதவித்தொகை உள்ளிட்டவைகளை வானதி சீனிவாசன் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்த புகார் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அதேநேரம் அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் உள்ள குறைகளை கண்டறிவதிலேயே திமுக அரசு நேரம் செலவிடாமல் ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளிலும் நேரத்தை செலவிடலாம்.

மக்களின் நலத் திட்டங்களுக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கும் விஷயத்தில், தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி. ஆர். பழனிவேல் தியாகராஜன், மத்திய அரசை பாராட்ட மனம் இல்லாமல் இருக்கிறார். எந்தெந்த திட்டங்களுக்காக மத்திய அரசு, மாநில அரசின் வாயிலாக நிதிகளை பகிர்ந்தளிக்க வேண்டும் என்று அமைச்சர் விளக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து, திமுகவின் 100 நாள் ஆட்சி குறித்து தற்போதைக்கு எந்தக் கருத்தும் சொல்ல முடியாது என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com