”ஆளுநருக்கு தமிழ் பற்றி என்ன தெரியும்?”- பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

”ஆளுநருக்கு தமிழ் பற்றி என்ன தெரியும்?”- பிரேமலதா விஜயகாந்த் கேள்வி
”ஆளுநருக்கு தமிழ் பற்றி என்ன தெரியும்?”- பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

செவிலியர்களை கறிவேப்பிலை போல் பயன்படுத்தி தூக்கி எறியக்கூடாது, அவர்களுக்கு உரியதை அரசு செய்யவேண்டும் என்றும், ஆளுநரின் கருத்து அரைவேக்காட்டுத்தனமானது, தமிழ்நாடு பற்றி ஆளுநருக்கு என்ன தெரியும் என்றும் மதுரையில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவருக்கு தேமுதிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.

தமிழகம் என்ற ஆளுநரின் கருத்து குறித்த கேள்விக்கு, ”ஆளுநரின் கருத்து எல்லாம் ஒரு கருத்தா? ஆளுநருக்கு தமிழ் பற்றி என்ன தெரியும். தமிழகம் என்றால் தமிழ்நாடு தான். தமிழகம், தமிழ்நாடு என்பதெல்லாம் வேறில்லை ஒன்றுதான். ஆளுநரின் கருத்து அரைவேக்காட்டுதனமானது, ஆளுநரின் கருத்தை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஆளுநரின் கருத்தை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது.

மக்கள் ஐடி குறித்த கேள்விக்கு பேசிய அவர், ஆதார் அட்டை மூலம் நலத்திட்டங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பணிக்கு வந்துள்ள வெளிமாநிலத்தவரின் விவரங்களை சேகரிக்க வேண்டும். மக்கள் ஐடியை மாநிலங்ள் தனித்தனியாக கொண்டு வர நினைத்தால் பெரும் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. மக்கள் ஐடி குறித்து மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். மக்கள் ஐடியை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா என்பதை தெரிந்துகொண்டு இந்த அரசு அதைப்பற்றி பேச வேண்டும்.

தேமுதிகவின் கூட்டணி குறித்த கேள்விக்கு, 2024ல் தான் தேர்தல். இன்னும் கூட்டணிக்கு காலம் உள்ளது. உட்கட்சி தேர்தல் நிறைவடைய உள்ளது. செயற்குழு, பொதுக்குழு கூட்டப்பட உள்ளது. நாங்கள் கட்சிப்பணியை செய்து கொண்டுள்ளோம். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் விஜயகாந்த் அறிவிப்பார்.

கொரானா காலத்தில் தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களின் உயிரை காப்பாற்றியவர்கள் செவிலியர்கள், நாளை கொரானா அதிகமாகும் போது செவிலியர்கள் பணிக்கு வரவில்லை என்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். கறிவேப்பிலை போல பயன்படுத்தி கொண்டு தூக்கி எறிவதை கண்டிக்கிறோம். செவிலியர்களுக்கு உரியதை அரசு செய்ய வேண்டும். செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

விஜய் - அஜித் சூப்பர்ஸ்டார் பிரச்னை குறித்த கேள்விக்கு, நோ கமென்ட்ஸ் எனக் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com